Saturday, 10 December 2011

முடிவு சொல்.....

காற்றை சுவாசிக்கிறேன். 
உன்னை நேசிக்கிறேன். 
வாழ்வதற்காக சுவாசிக்கிறேன். 
உன்னை நேசிப்பதற்காகவே வாழ்கிறேன். 

சில நேரங்களில்ல 
காற்றை நேசிப்பதைபோல 
உன்னையும் சுவாசித்துவிடுகிறேன். 

போராட்டம் மட்டுமல்ல 
காதலும்கூட 
உணர்வின் வெளிப்பாடுதான். 
அது இல்லையென்றால் 
மார்க்சோடு சென்னியேது? 
மார்க்சியமும் மண்ணிலேது? 

வார்த்தையில்லாமல் கவிதை இல்லை. 
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 

எனது பேனா 
கவிதைக்கு 
புது இலக்கணம் 
வகுத்துக் கொண்டிருந்தது. 

நானோ 
நமது காதலுக்கு 
புது இலக்கணம் 
வகுத்து கொண்டிருந்தேன். 

உரசினால் 
எங்கே நீ 
எரிந்து போவாயோயென்பதால் 
உன்னை 
பூஜிக்க மட்டுமே செய்கிறேன். 

நான் 
உன்மீது 
கொண்டுள்ள அன்பிற்கு 
களங்கப்பட்டுவிட்ட 
காதல் என்னும் வார்த்தையை 
பிரயோக படுத்த முடியாது. 

இலட்சிய பயணத்தில் 
வழித்துணையாய் 
வந்த உன்னை 
வாழ்க்கை துணையாய் 
அழைக்கும் துணிவு 
என்னிடமில்லை. 

கொள்கை பாதையில் மட்டும் 
குறுக்கீடு இல்லையென்றால் 
நீயே எனது.... 

என் காதல் 
ஒரு தலை ராகமல்ல. 
ஒருவகை ராகம். 
ஒட்டாமலே 
உதடுகள் இசைக்கும் 
சங்கீதம். 

ஆம் 
என் காதலை 
எப்போதும் நான் 
உன்னிடம் கூட 
சொல்ல துணிந்ததில்லை. 
ஆனால் 
அந்த சொல்லாத காதலிலும் 
சுமமொன்று 
இருக்கத்தான் செய்கிறது. 

உன்னில் 
விதைபோடாமலே 
என்னில் ஆசைகள் 
விருட்சமானது. 

உன் நினைவுகளை 
என்னில் போட்டு 
புதைத்தேன். 
பிறகுதான் தெரிந்தது 
விதைத்தேன் என்று. 

கற்பனை கூடாரத்தில் 
உன்னோடு 
கனவு வாழ்க்கை 
வாழ்ந்து வருகிறேன். 

உனக்கே தெரியாமல் 
நமது குடும்பம் 
நடந்து கொண்டுதானடி இருக்கிறது. 

என் மனசுக்குள்ளேயே 
நான் மௌனமாய் 
மானசீகமாய் 
அரங்கேற்றிய நாடகத்தில் 
நான் தலைவன் 
நீ தலைவி. 

உன்னோடு கைசேர விரும்புவது 
ஏதோ 
கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு 
கண்ணம் கிள்ளுவதற்காக அல்ல. 

ஒற்றைகாலன் 
ஒண்டி கட்டையாய் 
ஊர்போய் சேரமுடியாது 
என்பதால் 
உன்னையும் துணைக்கழைக்கிறேன். 

புரட்சி வானத்தில் மட்டுமே 
பறந்து பழகிய 
எனது கவிதை பறவை 
பூவானத்தில் சிறகடிக்க 
உனது சிறகுகளை 
கடன் கேட்கிறேன். 

உன் புன்னகை பூத்த முகத்தைதான் 
புத்தகமென்றே நினைக்கிறேன். 

கண்ணே! 
உன் கபடமற்ற 
அர்த்தமற்ற சிரிப்புக்கு 
ஆயிரமாயிரம் அர்த்தங்களை கற்பித்து கொண்டிருக்கிறேன். 
அந்த புரியாத சிரிப்புக்கு 
புதிதான அர்த்தம் தேடி 
மெல்ல மெல்ல 
தோற்றுபோய் கொண்டிருக்கிறேன். 

"நீ ரொம்பத்தான் 
மாறிவிட்டாய்" - என்கிறாய் 
என்னவளே! 
இந்த மாற்றத்திற்கே 
காரணமானவள் 
நீயல்லவா? 

கொள்கையை 
பாதுகாப்பதிலும் சரி 
இலட்சியத்தை 
நிறைவேற்றுவதிலும் சரி 
இன்னும்கூட 
நான் 
இரும்பு சங்கிலிதான். 
ஆனால் 
நான் 
இரும்புசங்கிலியென்பதுதான் 
என்னுடைய 
இப்பொழுதைய பலவீனமே. 
ஏனென்றால் 
உன் பார்வை காந்தமாயிற்றே. 

உலகின் 
ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் 
நீ 
ஒரே பார்வையில் 
பிரதிபலிப்பாயே! 
அந்த பார்வை வழங்கிய 
ஜென்ம சாபல்யத்தை 
பத்திரமாய் 
மிக பத்திரமாய் .... 

உன் ஒற்றை பார்வையில் 
ஓராயிரம் சொர்கங்களை 
தரிசித்துவிட்டு போகிறேன். 

எனது சுவாசத்தின் 
ஆதாரம் 
மற்றும் 
அர்த்தமாய் 
இருப்பவள் 
நீ. 


மண்பானைக்குள்ளே 
தேனை வைத்திருப்பதுபோல 
என்னுள் 
உன்னைபற்றிய 
இனிய கவிதைகள் மட்டுமதான் 
இருக்கிறது. 

என்னவளே! 
உன்னைவந்து அடைவதற்கே 
உருவாக்கப்பட்ட 
எனது பல கவிதைகளுக்கு 
சிறகுகள்கூட 
இன்னும் முளைக்கவில்லை 
ஆனால் 
எனது கனவுகளில் மட்டும் 
காலமரம் 
இப்போதே 
பூ பூக்க தொடங்கிவிட்டது. 

அந்த கனவூகள் யாவும் 
உனது கடையில்தான் 
வாங்கப்பட்டது. 

எங்கே உனக்கு 
நினைவிருக்கிறதா? 
ஒரு நாள் 
"உனக்கு 
கவிதை எழுத தெரிமா? 
என்று கேட்டாய் நீ. 
அப்போது 
இப்படித்தான் 
என் மனசுக்குள்ளேயே 
சொல்லி கொண்டேன் 
"ஏ கவிதையே! 
உன்னை படிக்க தெரியுமடி" 
என்று. 

ஜனகன மனஅதியைபோல் 
உன் பெயரால் 
ஒரு காதல் கீதம் இயற்றி 
உன் பிரமிப்புகளை 
என் கையில் 
வாங்கிக்கொள்ள ஆசை. 
ஆனால் 
ஏனோ தெரியவில்லை 
ஏழு ஸ்வரங்களுக்குள் 
நீ 
அடங்காமல் போய்விடுகிறாய்.... 

என் கவிதையினை 
யார் வேண்டுமேயானாலும் 
இதழ்களில் சூடலாம். 
ஆனால் 
நீ மட்டுமே 
இதயத்தில் சூடமுடியும். 

என் கவிதை 
உன் இதழ்களில்ஏறி 
உட்கார்ந்து கொண்டால் போதும். 
அது 
அச்சில் ஏறி 
அமர்ந்துவிட்டதாய் 
ஆனந்தமடைவேன். 
அதன்பின் 
அது 
காற்றிலே தொலைந்துபோனாலும் 
சிரஞ்சீவியே. 

என் கவிதை தோட்டத்தில் 
எத்தனையோ காவிய மலர்கள். 
நீ சூட மறுத்து விட்டால் 
அவை வெறும் 
காகித மலர்கள். 

உன் இதயகோயிலில் தொடுத்த 
மலர்களின்உன் இதயகோயிலில் தொடுத்த 
மலர்களின் எச்சங்களைதான்
இறைவனுக்கு
சமர்பிக்கிறேன்.

இந்த பாட்டு பறவை
பறக்க பழகி கொண்டதே
உனது ஆகாயத்தில்தானே
கள்ளத்தனமாய்.

தெரியுமா உனக்கு?
உனது
இதழ்கள் திறக்கப்படும்போதுதான்
எனது
எழுதுகோலும் திறக்கப்படுகிறது.

உனது
ஒவ்வொரு சிரிப்பும்
என் கவிதை குழந்தையின்
கருவறை.
என் கவலை சவங்களின்
கல்லறை.

யோசிக்கிறேன்.
உன்னிடம்
அந்த கவிதைகளை விற்றுவிட்டு
உன் காதலை
வாங்கி கொள்ள முடியுமா என்று.

உனக்கு
பரிசளிப்பதற்காக
ஒரு கையில்
விலைமதிப்பற்ற கவிதைகளையும்
உன்
இதயத்தை யாசிப்பதற்காக
இன்னொரு கையில்
பிச்சை பாத்திரத்தையும்
ஏந்தி நிற்கிறேன்.

யோசித்து பார்க்கிறேன்.
யோசித்து பார்ப்பதற்கு
உலகில்
உன்னைதவிர
வேறென்ன இருக்கிறதென்று.

உன் பெயரல்லாத கவிதையினை
எனது பேனா
எழுதுகிறபோது
ஏதோ
காகிதத்தை
களங்கபடுத்திவிட்டதாய்
உணர்கிறேன்.

நீயல்லாத பாடலினை
எனது உதடுகள்
உதிர்த்துவிட்டால்
காற்றை
களங்கப்படுத்திவிட்டதாய்
நினைக்கிறேன். 
ஏதோ
நான் பார்க்கும்
வெள்ளையேடுகள் எல்லாம்
உன் பெயா;
பதிக்கபடுவதற்காகவே
படைக்கப்பட்டதாய்
தோன்றுகிறதெனக்கு.

எதிலிருந்து
எழுத தொடங்கினாலும்
மீண்டும் மீண்டும்
காதல் என்கிற புள்ளியிலேயே
வந்து முடிந்து போகிறது.
என் கவிதைகளனைத்தும்.

உன் உதடுகளிலிருந்து
உதிர்க்கபட்டால்
கழுதையென்பதும் கவிதைதான்.

இதோ
இந்த சிரிப்பில்தான்
நான்
எனது இலட்சிய விலாசத்தை
தொலைத்துவிட்டேன்.

எனது இரவுகளும் சரி
பகலும் சரி
உன் நினைவுகளுக்குதான்
இரையாக்கப்படுகின்றன.

எனது நிழலைகூட
இருட்டில் போகும்போது
தொலைத்துவிட்டுத்தான்
போகிறேன்.
உனது நினைவுகளையோ
நீராட போகும்போதுகூட
எடுத்து கொண்டல்லவா செல்கிறேன்.

உன் நினைவுகள்
என் அருகில் படுத்துகொண்டு
ஆரிராவும் பாடுகின்றன.
உறங்கிய பின்னே
ஓங்கியும் அடிக்கின்றன.

உன்னை காணும்போதெல்லாம்
கண்களில்
வண்ணம் பூசிக்கொண்டதாய்
ஒரு புரியாத பூரிப்பு.
ஆனால்
அதே நேரத்தில்
இதயத்தில்
ஏதோ
இனம் தெரியாத சுமை
ஏறிக்கொள்கிறது.

உன்னை பிரிந்து கழிக்கின்றபோது
ஏதோ
இந்த பூமி
என்னை விட்டுவிட்டு
தான் மட்டும்
தனியாய் சுழல்வதாய்
உணர்கிறேன். 
கொதிக்கும் பகலிலும்
குளிர் காய்கிறேன்
உன் வரவால்.
பனி இரவிலும்
பற்றி கொண்டு எரிகிறேன்
உன் பிரிவால்.

உன்னை
காதலிக்க தொடங்கியபின்
நான்
எனது இமைகளைகூட
தொலைத்துவிட்டேன்.

உன்னோடு கழிக்கின்றபோது
ஆண்டுகள்கூட
அணுப்பொழுதாகிவிடும்
அதிசயம்
இன்னும் விளங்கவில்லை.

நீ
என்னோடு
இருந்த நேரங்களிலும்
பிரிந்து செல்லபோகும்
நேரத்தை நினைத்து
வருந்தி கொண்டுதான் இருந்தேன்.

தெரியுமா உனக்கு?
உன்னை காணாதபோதெல்லாம்
நான்
கல்லறைக்கு
போய்விட்டேனென்று.

நீ
மாட்டேனென்று
மறுத்தபோது
இன்றோடு
இந்த உலகம்
முடிந்துவிட்டதாகத்தானடி
தோன்றியதெனக்கு.

உன்னை பார்க்காவிடில்
பகலும்கூட
அமாவாசைதானடி எனக்கு.

என்னவளே!
எங்கெல்லாம்
ஒளிந்திருக்கிறாய் நீ தெரியுமா?

இடைவெளியெதையும்
மாற்றுமென்பதால்
இரண்டாயிரம் மைல்களுக்கு
அப்பால் நான்.

ஆனால்
செம்பல் நதியின் சினுங்கலும்
சிட்டுக்குருவியின் கீச்சலும்
உன்னைத்தானடி
நினைவுபடுத்துகிறது.

அழகானயெதுவும்
உன்னை
எளிதாக நினைவுபடுத்திவிட்டு
போகிறது.

அழுகுயென
நான்
ஆராதித்துகொண்டிருப்பது
உன் பௌதீக வடிவத்தையல்ல.

உன்னோடு நடத்தும்
பார்வை பரிமாற்றத்தின்போது
என்னுள்
ஏதோ
ரசாயண பரிமாற்றமும்
நடந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

உன்னை நினைவூபடுத்திகொள்ள
என்
இதய துடிப்பைதவிர
வேறு எதுவுமே இல்லையடி
என்னிடம்
இப்போது.

ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பதைப் போல
துடிதுடிக்கும்
உன் இமைகளையே
இமைகொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உன் கபடமற்ற சிரிப்பு
இன்னும் எனக்கு
அப்படியே
நினைவிருக்கிறதடி.
எனது ஒவ்வொரு பார்வையாலும்
உன்னை
புகைப்படம் பிடித்திருக்கிறேன்.
நீயில்லையென்றாலும்
அந்த நினைவுகளையே
என்னோடு வாழ
துணைக்கழைத்து கொள்வேன்.

என் நெஞ்சவானத்தில்
நினைவு மேகமாய்
நீ
ஒவ்வொரு பொழுதும்
உலா வருவாய்
எனது
அந்த நினைவு நிலாவுக்கு மட்டும்
தேய்பிறை
என்றென்றும் இல்லையடி.

என்னவளே!
என்னை மறந்துவிடு
என்று சொன்னவளே!
தேதி காகிதங்களை
கிழிப்பதை போல
அந்தந்த தின நினைவுகளையும்
கிழித்தெறிய முடிந்திருந்தால்
நீ கேட்பது சாத்தியம்தான்.

விடியலின் அடையாளம்
வெண்மணியின்
விலகலில்தான் அடங்கியிருக்கிறது.
எனது விடியல் மட்டும்
உனது வருகையில்தான்
அடங்கியிருக்கிறது.

உன் காலடி ஓசையில்தான்
என் இதயதுடிப்பை
கேட்கிறேன்.

கண்ணே!
சிறியதாய்
உன்னுள்
ஒரு உலகம்
அடங்கியிருப்பதாய்
உணர்கிறேன்.

எனது பார்வைக்கு
நீ மட்டும்தான்
இந்த பிரபஞ்சம் முழுதும்
நிரம்பி வழிவதைபோல
தோன்றுகிறது.

எனக்கென்று வாய்த்த
சின்னதொரு உலகமடி
நீ.

நிலாவின் ஒளியெல்லாம்
உன்மீது மட்டுமே
வீசுவதாய்
தோன்றுகிறதெனக்கு

நீ
நடந்து வந்த
சுவடுகளில் நடப்பதையே
பேரானந்தமாய் உணர்கிறேன்.

நான் கொண்ட பெருமையே
நீ தானே கண்ணே!

என் வாழ்வின்
வறண்ட பூமியில்
நீ மட்டும்
நீர்ச்சுனையாய்
கிளம்பவில்லையென்றால்
எப்போதோ
நீர்த்து போயிருப்பேனடி.

மேகம் வந்து
மெதுவாய்
தொட்டுச் செல்வதுபோல்
உனது தாவணி
என் கண்ணத்தில் பட்டுச்செல்லும்
இந்த பருவமழை
அனுபவத்தில் நனைவதற்கே.

நான் இத்தனை தூரங்களை
கடந்துவந்தேன் போலும்.
இத்தனை வருடங்களை
தாண்டிவந்தேன் போலும்.
இந்த உலகத்தில்
எனது பங்கு
நீ மட்டுமே.

வாழ்ந்தால் உன்னோடு
இல்லையெனில் மண்ணோடு
இவை வெறும்
கவிதை கோடுகளல்ல
காரண கோடுகள்.
ஆனால்
நிரப்பி தர வேண்டியவள் மட்டும்
நீதான் கண்ணே!

எனது சிந்தனையை
சில்லறை மாற்றிவைத்து கொண்டு
உனக்காகவே
மெல்ல மெல்ல
செலவழித்து வருவேன்.

கண்ணே!
உனது இசைவுக்காய்தான்
இந்த எழுத்துக்களின்
எழுச்சி பேரணியை
நடத்திக் கொண்டு வருகிறேன்.

இல்லையெனமட்டும்
சொல்லிவிடாதே
ஏனெனில்
இப்போதே
நான்
ஏறத்தாழ இறந்துவிட்டேன்.

எந்த மலரையும்
பார்த்துக் கூட செல்லாதவன்
பறித்துக் கொள்ள ஆசைபட்டது
இந்த மலரைத்தான்.

ஏ சம்யுக்தா!
நான்
குதிரையில்லாத
பிருத்துவிராஜன்தான்
ஆனால்
வாழ்க்கை பயணத்தில்
உன்னில்
சுமையேறமாட்டேன்.

நீ
சொல்ல போகும்
இம்மென்கிற சம்மதத்தைதான்
ஒரு பூபாளமென்று
நினைத்துக் கொண்டு
ஒரு விடியலுக்காய்
காத்திருப்பேன்.

முடிவு சொல்.
எனக்கு முடிவு கட்டிவிடாதே.

Friday, 9 December 2011

என்றும்...என்றென்றும் ...


உன்னைத் தேடும்போதெல்லாம்
போர்வைக்குள் ஒழிந்து
அழப்பிடிக்கும் .....!!
உன்பிரிவை நினைக்கும்
போது மட்டுமே
மரணமும் இனிக்கும் ...!

வரிகளில் வலித்தெரியாது
என்
வலிகள் வரிகலாகமுடியாது..

என்றும்...என்றென்றும் ...

இப்படிக்கு ,

அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !


இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...




இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

தெரியவில்லை ......


தெரியவில்லை ......

நீ உன்னோடு எடுத்துச் சென்றது
என் சிறகுகளையா..
இல்லை
வானத்தையா ..???

பரிசளித்தேன்...!


சின்ன சின்ன கனவென்னும்
முத்துக்களை காதல் என்ற
மணிமாலையாக கோர்த்து வைத்தேன்...!

பலகாலம் உன்னோடு வாழவே
உன்னக்கென பரிசளித்தேன்...!

நீ என் காதலை உதறிய போது
சிதறியது மணிமாலையான
கனவுகள் மட்டுமல்ல,
உன்னையே உயிரென நினைத்த
மனதும் தான்........!

என்னை போல....


எத்தனையோ முறை
எழுதுகோலை திற‌ந்து
மூடி வைத்தேன்
ஒருமுறை கூட
ஒன்றும் எழுதவில்லை
அந்த வெள்ளை தாளை
கற்பழிக்கும் முயற்சி
இதுவரை என்னால்
இயலவில்லை
இதில் கூட தோற்றுகொண்டிருக்கிறேன்
இரக்கமில்லாத அவளின்
இதயத்தை களவாடும்
முயற்சியை போல‌
எதாவது சாபம் கொடுத்திருப்பாளோ...?!?
மையை மயங்கி போவென...;
கையை அசையாதேயென..;
புத்தியை புலம்புயென;
இப்போது கூட பாருங்கள்
எழுதுகோல் தலைகுனிந்து
ஒழுகுகிறது...?
அவள் முன் நிற்கும்
என்னை போல....

என் காதல்வாழும் .....

உயிரே... 

என் காதலை உன்னிடம் 
சொல்ல வந்த போது... 

உன் காதலை என்னிடம் சொன்னாய்... 

நீ ஒருவனை காதலிக்கிறேன் 
என்று .... 

இதனை கேட்ட நான் வருத்தம் 
கொள்ள வில்லை... 

சந்தோசமடைந்தேன்.... 

என் காதலை நான் 

சொல்லி இருந்தால்.... 

நீ மறுத்திருக்க கூடும் .... 

உன்னிடம் சொல்லாததால் .. 

என் காதல் நான் இம்மண்ணில் 
வாழும்வரை வாழும் .....

கற்பனை காதல்!!


கனவுக்கும்
கற்பனைக்கும்
சிறு வித்தியாசம் தான்
நான் உன்னை காதலிப்பேன்- கனவில்
நீ என்னை காதலிப்பாய்- கற்பனையில் 

அடைகாத்துக்கொள்கிறேன்!!

காதல் என தெரிந்தும்
அதைச் சொல்ல மனம் வரவில்லை
கண்ணில் நீர் குவிந்தும்
அவன் கண் காண மறுக்கவில்லை
என்றும் ஈரமுல்ல நெஞ்சம்
இன்று கண்ணீரால் பாரமாகிப்
போனது ஏன்?
காயமெனத் தெரிந்தும் அவன்
மாய விழிகளை ஏன் தேடுகிறேன்?
பூக்க விரும்புகிறேன்
நாளை வாடப் போகிறேன்
எனத் தெரிந்தும்.
என் வாழ்க்கையில் புள்ளிகளை
மட்டும் வைத்துச் சென்றுவிட்டான்
கோலம் போட மறந்து.
நான் பருகும் நீரில் நீ
தேனிலும் நீ.
என் உயிரிலும் நீ
உடலிலும் நீ
வென்பனியிலும் நீ
என் பணியிலும் நீ
உன் மீது ஏற்பட்ட
காதல் பிணிக்கு
மருந்தாய் வா.
காதலனே! மருந்தாய் வா.
என் கவிதையின் ஒவ்வொரு
வரிகளும் உனக்கு சொந்தம்
கள்வா.!
கவிதையை மட்டும் சொந்தமாக்கிக்
கொண்டாயே என்னை மறந்து
உனை நினைத்து எழுதும் வேலை
தூரத்தில் பாடும் குயில் சத்தம்
சந்தம் மிக்க சத்தம் அது
நீயே எனை அழைப்பது போல
உணர்ந்தேன்...
கடவுளை நம்பாத நான்
இன்று உனக்காக கடவுளை
வேண்டி நிற்கிறேன்
இல்லாத இம்சைகள் தருகிறென்
இறைவனுக்கு.
உன் பொல்லாத பாசத்தை வேண்டி
சகலமும் தெரிந்த சந்திரனுக்கே
சவால் விடுகிறேன்
உனை தினம் தினம் நான்
வருணித்து கவிதை
கூறுவது போல
என்னவனும் என்னை வருணிக்கும்
நாள் வருமென....
எல்லா பெண்களுக்கும் உள்ள
சுகம் தானே.......
என்னவனே நீ தான் என் உலகம்
என்று ஒருபோதும் சொல்லேன்
உன் உலகத்தின் புல்லாக மாட்டேனா?
அனுமதி தருவாயா?
என்றுதான் கேட்கிறேன்...
நீ சோர்வாய் இருந்தால்
தலை சாய்த்துக் கொள்ளவும்
மகிழ்வாய் இருந்தால்
என் மடி சாய்ந்துக்கொள்ளவும்
மழை விழும் தருணத்தில்
உன் நுனிவிரலால் .
புல்லின் பசுமையை.
இயற்கையை
தொடும் வேலை ஏற்படும்
கூச்சத்திற்கு
பெண்மையின் நாணமே சாட்சி...
அத்தகைய புல்லாக
நான் வாழவேண்டும்!
உன் அருகில் வாழும்
அனுமதி கொடு!
நம் அன்பெனும் கூட்டுக்குள்
என் காதலை யாரும்
பறிக்காமல்
அடைகாத்துக்கொள்கிறேன்!!

உன் பிரிவு !


காதலின் வெம்மையை விட
பிரிவின் நிழல்
சில நேரங்களில் மேலானது !
=============
தொலைக்கவிருந்த என் அடையாளங்களை
மீட்டுக்கொடுத்தது - உன் பிரிவு !

உனக்கும் எனக்குமான காதல் !


மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து ,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு ,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி ,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம் ...


நடைபாதை ஆவாரம்பூவை
நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு ,
நகராது போன நிமிடங்களைப் பற்றி
நிறுத்தாமல் பேசிக்கொண்டு ,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை .....

அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் ,
உனக்கும் எனக்குமான காதல் !

மாறி விட்டேன்....


அடர்ந்த வனத்தினில் கேட்கும்
உன் குரல் தேடி......
பறவையாக, பூவாக, மரமாக,
நதியாக மாறி விட்டேன்....
இப்படி தேடி தேடி ஒரு நாள்
நான் மாறவும் கூடும் நானாகவும்!!!!!

காதல்...


பார்க்காமல் செய்யும் காதலுக்குத்தான்
எவ்வளவு வலிமை?
#1
பார்த்ததும் பற்றிக் கொள்ளும் காதல்
உதவி செய்து உண்டாகும் காதல்
பார்த்து பார்த்து சிரித்துக் கொள்ளும் காதல்
வாழ்க்கையையே சிரிப்பாக்கும் காதல்
சண்டைப் போட்டு அழுதுவிடும் காதல்
அழ வைத்து ஆனந்தப் படும் காதல்
குனிய வைத்து குமுற வைக்கும் காதல்
கூனிக் குறுகி வெட்கப்படும் காதல்
நாய் போல் அலைய வைக்கும் காதல்
பேய்ப் போல் விழித்திருக்கும் காதல்
சேய்ப் போல் நடக்க வைக்கும் காதல்
தாய்ப் போல் பாசம் காட்டும் காதல்
காய்ப் போல் கசந்து விடும் காதல்
இவ்வளவாக வகைப் படுத்தும் காதல்
எனக்கு மட்டும் பார்த்துக்கொள்ள கூட
முடியாமல் கனவில் பாடாய்ப் படுத்தும் காதல்...

நீ.............!

என் விழிகளுக்கு காட்சியாக
மட்டும் அல்ல நீ.............!
என் உதடுகளுக்கு வார்த்தைகளாக‌
மட்டும் அல்ல நீ.............!
என் இதயத்திற்கு துடிப்பாக‌
மட்டும் அல்ல நீ............!
என் வாழ்க்கையே நீயாக இருப்பதால்
கனவே கலைந்து விடாதே................! 

இருவரும் ... இருவரில்...


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்

=====================

மீட்கப்படாத வீணை தந்த

கேட்கப்படாத ராகம்

=====================

இருவரும் ... இருவரில்

ஒளிந்து கொள்ளும்

கண்ணாமூச்சி

=======================

திரியும் நெருப்பும்

முத்தமிடும் புள்ளி

======================

பிறந்த குழந்தையின்

சுண்டுவிரல் நகம்

=========================

அலைகள் விட்டுச் செல்லும்

மணலைக் கொஞ்சும் ஈரம்

பின்னொரு பொழுதில்....


அடர்ந்ததாயும் ,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து ,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து ,
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது .
பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது ..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச்சென்றதுண்டு ....

ஓட்டை தவிர்த்த நத்தை...


அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் ...

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்
அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

உன்னைப் பற்றியே...


நீ பகிர்ந்து கொண்ட மௌனங்கள்
எழுதப்படாத கவிதையாய் என்னுள்..

************************************

விழிகள் மொழிபெயர்க்கும்
உயிர் குடிக்கும் உன் மௌனத்தை ..

******************************

கடந்த யுகங்களில் தொலைத்த காதலை
கண்டெடுத்தேன் உன் கருவிழிக்குள் ...
******************************
உன்னிடம் பேசாத பொழுதுகள் ..
உன்னைப் பற்றியே பேசுகின்றன

தனிமையிலேனும் ...


பத்திரமாய் படிந்திருக்கிறது 
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் 
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில் 

இதுவே போதுமானது 
உயிரைப்பிழியும் என் தனிமையை 
வரைதலில் எடுத்துரைக்க 

ஜன்னல் கண்ணாடியில் 
மங்கிய வெளிச்சத்தில் 
எனதென ஊகிக்ககூடியதாய் 
ஒரு பிம்பம் 
அனுமதிப்பதில்லை 
தனிமைக்கான என் சித்திரத்தை 

தனிமையிலேனும் 
உண்டாகிறது 
எனக்கான என் இருத்தல்