Wednesday, 14 December 2011

நேரம்....

கடிகார முட்கள்
ஏன் இவ்வளவு
வேகமாக ஓடுகின்றன?
உன்னிடம் பேசும்போது மட்டும்.

(என் மரணம் வரை)


என் வாழ்வே,
அன்பே நீ நெருப்பாயிரு
என் வாழ்வில் தீபமேற்ற.......
அன்பே நீ குளிராயிரு
என் மனதினை குளிரூட்ட.....
அன்பே நீ ஆசிரியராயிரு
நான் புதியதை கற்றிட.........
அன்பே நீ தோழியாயிரு
என் நட்பினை வளர்க்க.......
அன்பே நீயென் முயற்சியாயிரு
நம் வாழ்வில் உயர்ந்திட.......
அன்பே நீயென் காதலியாயிரு
என் காதலை அனுபவித்திட‌
(என் மரணம் வரை)

காதலிப்பதைத் தவிர?

நான் மழையில்
நனைந்ததற்கு
மழையை
ஏனடா திட்டுகிறாய்?
என்றால்
என்னவளான
உன்னைத் தீண்ட
அதற்கு
எத்தனை தைரியம்
என்கிறாய்...!
காற்று
என்னை நித்தமும்
தீண்டுகின்றதே
அதை என்ன செய்வாய்?
என்றதற்கு
அது என் முச்சுக்காற்று
தானே
நான் தான் அனுப்பி வைத்தேன்
உன்னை தழுவி இருக்க...!
என்றாயே பார்க்கலாம்
உன்னை என்னடா செய்ய காதலிப்பதைத் தவிர?

உன் பெயர்....


என் பேனா
முனை பட்டால்
உன் பெயர்
காயப்படுமென்றேன்.....
உன் விழி பட்டு
என்னிதயம்
உடைந்ததையறியாமல்

எப்படி புரிய வைப்பேன்?

ஏ வண்ணத்துபூச்சியே!
உனக்கு எப்படி புரிய வைப்பேன்?
நீ சுற்றிக்கொண்டு இருப்பது
பூவை அல்ல..
பூவினும் மெல்லிய என்னவளை என்று!!!

உன் உதடுகளுக்கு....

என்னிடம் பேசும் பொழுது மட்டும்
விடுப்பளித்துவிடேன் உன் உதடுகளுக்கு....
துள்ளித்திரியும் மானாய் உன் விழிகள்..............
அதை தேடித்திரியும் துணையாய் என் விழிகள்.........
பார்வையிலே ஆயிரம் கதை சொல்லும் உன் கண்கள் இருக்க
நமக்கெதற்கடி இந்த பாஷையெல்லாம்.......

கைகழுவிச் செல்கிறாயே!!!...


நான் வானம் ஆகும் முன்னே மேகம் ஆனவளே!!..
நான் மேகம் ஆகும் முன்னே மழை ஆனவளே!!..
நான் கடல் ஆகும் முன்னே அலை ஆனவளே!!..
நான் அலை ஆகும் முன்னே கரை ஆனவளே!!..
நான் கலை ஆகும் முன்னே சிற்பம் ஆனவளே!!..
நான் சிற்பம் ஆகும் முன்னே சிலை ஆனவளே!!..
நான் கவிஞன் ஆகும் முன்னே என் காதலி ஆனவளே!!..
நான் கவிஞன் ஆன பின்னே என் கவிதைகள் ஆனவளே!!..
என் உடல் வருன் முன்னே என் உயிர் ஆனவளே!!..
என் உயிர் வந்த பின்னே என் உணர்வுகள் ஆனவளே!!..
உன்னை கைப்பிடிக்க நினைக்கும் முன்
என்னை கைகழுவிச் செல்கிறாயே!!!...

வெகு காலமாய்....

தேடிக் கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லையாம்
உன்னைத் தொலைத்திட
மனமின்றியே
தேடுவதில் காலம் கழிக்கிறேன்
வெகு காலமாய்....

வியந்து போய் நிற்கிறேன்...


மூளையில் சேகரித்து
வைத்திருந்த நினைவுகளிலிருந்து
ஒன்றை எடுத்து சரி பார்த்தேன்.
நான் எப்போதிலிருந்து
கவிதை என்ற ஒன்றை
எழுத ஆரம்பித்தேன்?
ஆம் சகியே!
உன்னைப் பார்த்ததிலிருந்துதான்
நான் எழுதிய முதல் கவிதையே
உன்னைப் பற்றித்தான்.
எப்படி இருக்கிறது
என்றதற்கு
'கிறுக்கல்கள்' என்று சொல்லி
நகர்ந்து போனாய்.
கவிதையைப் பற்றி
கவிதை எழுதினால்
எப்படி கிறுக்கலாகும்
என நினைத்து குழம்பிப் போனேன்.
பின்பு நான் எழுதிய
அனைத்தையும் கிறுக்கல்கள்
என்றாய், ஏன் என்னையே
கிறுக்கன் என்றாய்.
காலத்தின் கட்டாயத்தினால்
நான் உன்னிடம் எழுதிய
முதல் கிறுக்கலை
பத்து மாதத்திற்கு
பிறகு 'நீ எழுதிய அழகிய
கவிதை இது' என்கிறாய்.
இங்கே
கவிதை கிறுக்கல்கள் ஆனதும்
என் கிறுக்கல் கவிதை ஆனதையும்
நினைத்து
வியந்து போய் நிற்கிறேன்
நான்!!!

தோழி ஒருத்தி வேண்டும்!!!!


வையகம் தன்னில்
நான் வாழும் கதை கேட்க
புக்ககம் தன்னில் நான்
புகுந்த கதை சொல்ல....
பிள்ளைகள் ஈன்று நான்
பேறு கண்ட நிலை காண
தோழி ஒருத்தி வேண்டும்.....
கொற்றவன் கொண்ட
காதலை சொல்ல
நாணம் கொண்டு
நான் நகைப்பதை ரசிக்க...
கொள்ளை இன்பம் கொண்ட
கதைகள் கோடி சொல்லி
கிள்ளிச் சிரிக்க
தோழி ஒருத்தி வேண்டும்
வான் சுமக்கா சுமை தனை
யான் சுமந்த கதை கேட்க
துள்ளித்திரிந்த நான் துவண்டு
போனதை பார்க்க
துயர்தனை துடைத்து
என்னை தோளிலிட்டு தாலாட்ட...
மடியமர்த்தியென்னை
மஞ்சம் சேர்த்து தூங்கவைக்க
காரணமில்லாக் காரணத்திற்கெல்லாம்
கரைந்த போது
கண்ணீர் துடைக்க.....
கள்ளமில்லா உள்ளத்தோடு
நானிருக்கேன் உனக்கடி
எனச்சொல்ல
தோழி ஒருத்தி வேண்டும்
அஞ்சி நடுங்கி நான்
அடியமையானதை சொல்ல
தஞ்சம் எனக்கொள்ள
நெஞ்சம் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க....
அக்கரை கனவுக்கு நான்
ஆசைப்பட்டதை சொல்ல
இக்கரையைக் கூட நான்
இழந்த நிலை காண....
அண்டை வீட்டார்க்கு
நான் அரசியாய் இருக்க
அடுப்படிக்கு கூட நான்
ராணியில்லை என உணர்த்த......
இச்ஜெகம் என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
துயர்தனில் வாழும்
வெட்கம் கெட்ட
என் வேதனை சொல்ல
தோழி ஒருத்தி வேண்டும்!!!!
பசித்தும் உண்ண மறுக்க
விரல் நுனி தீண்ட
அவள் ஊட்டும் பருக்கை உண்ண....
உறவென்று சொல்லி
என்னை தேற்ற
தோழி எனச் சொல்லி
யாழிசை பாடிட.....தாயாய்
தோழி ஒருத்தி வேண்டும்!!!!

உயிரே உனக்காகத்தான்....


எவ்வளவு பிடிக்கும்
என்னை என நீ கேட்கும் போதே
சொல்ல எல்லையை
தேடுகின்றேன்
எங்கு பார்த்தாலும் நீ தான்
தெரிவதால் இவ்வளவு
என்று இன்று வரை
வரையறுக்க முடியவில்லை
உன்னை எவ்வளவு பிடிக்கும்
எனக்கு என்று......
***********************
இதயமில்லாத என்னிடம்
இருப்பிடம் கேட்கிறான்
இயல்பாய் இருந்த
ஒருவன்..
***********************
வாசம் கொண்ட
மலர்களோடு மட்டும்
வசப்பட்டு இரு...
பேசாமல் பேசும்
என் மொழியை இவைகள்
உன் இதழ் வலிக்காமல்
முத்தமிட இந்த பூக்களால்
மட்டுமே முடியும்
என் சார்ப்பாக.....
**************************
சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயரை தான்
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய்
தெரிவதும்
உன்முகம் தான்
உயிரில் ஒலிக்கும்
என் மொழிகேள்
அதில் மறந்தும்
ஒலிப்பது
உன்குரல் தான்
பாதை இல்லா
என் பயணம் கூட
உன் பார்வை பட்ட
பாதையில் தான்
உறங்கும் போது
நான் ஓய்வு
எடுப்பதும்
ஓயாத உந்தன்
கனவில் தான்
ஓடி கொண்டு இருக்கும்
என் இதயம்
ஓயாமல் துடிப்பதும்
உயிரே உனக்காகத்தான்

சொல்லத் தெரியவில்லை...


ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சில முகங்களை
முதன் முறையாய் பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலை பேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!

உன்னைக் காதலிக்கிறேன்...

நீ என் அருகில் 

இல்லாத நேரங்களிலெல்லாம் 

நான் பிறர் காது கிழிய 

கத்தியிருக்கிறேன். 

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று.

Monday, 12 December 2011

புரியவைக்க முடியவில்லை!


நீ தொலைவில் இருப்பதை
புரிந்துகொள்ளும் எனக்கு
உன் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் என்
இதயத்திற்கு புரியவைக்க
முடியவில்லை!
உன் நினைவுகள்
இதயத்தில் கூட இருப்பதால்
அருகிருப்பதாய் நினைக்கிறது
எப்படி சொல்வது
நம் மனங்கள் தான் அருகில்
நிஜத்தில் தொலைவில் என!

இறைவனுக்கே பிறந்த நாள் ....

இறைவனுக்கே பிறந்த நாள்
எம் யேசு பாலன் பிறந்த நாள்
அனைவரும் மகிழ்ந்திடுவோம்
அன்பாக வாழ்த்திடுவோம்
ஏழைக்குடிலில் பிறந்து
எமக்காக சிலுவை சுமந்து
இன்னல்களை தாங்கிய
இனியவனை வாழ்த்திடுவோம்

நம் காதலில்.....


நீ பனியாக இருந்தால்
நான் குளிராக இருப்பேன் .......!
நீ நெருப்பாக இருந்தால்
நான் அனலாக இருப்பேன்.......!
நீ நீராக இருந்தால்
நான் கலவையாக இருப்பேன்.......!
நீ பூவாக இருந்தால்
நான் வாசமாக இருப்பேன்.......!
நீ மழையாக இருந்தால்
நான் குடையாக இருப்பேன்.......!
நீ பசுவாக இருந்தால்
நான் மடியாக இருப்பேன்.......!
நீ இசையாக இருந்தால்
நான் ரிதமாக இருப்பேன் .......!
நீ மூங்கிலாக இருந்தால்
நான் காற்றாக இருப்பேன் .......!
நீ கடற்கரையாக இருந்தால்
நான் மணலாக இருப்பேன் .......!
நீ செம்மொழியாக இருந்தால்
நான் இலக்கணமாக இருப்பேன் .......!
நீ கவிதையாக இருந்தால்
நான் கவிஞனாக இருப்பேன் .......!
நீ கண்களாக இருந்தால்
நான் கண்ணீராக இருப்பேன் .......!
நீ தாயாக இருந்தால்
நான் சேயாக இருப்பேன் .......!
நீ நிறமாக இருந்தால்
நான் நிறம் மாறி இருப்பேன் .......!
நீ மரமாக இருந்தால்
நான் வேராக இருப்பேன் .......!
நீ தசையாக இருந்தால்
நான் குருதியாக இருப்பேன் .......!
நீ நிலவாக இருந்தால்
நான் வானமாக இருப்பேன் .......!
நீ நட்சத்திரமாக இருந்தால்
நான் வெளிச்சமாக இருப்பேன் .......!
நீ சொற்களாக இருந்தால்
நான் காவியமாக இருப்பேன் .......!
நீ செய்யுளாக இருந்தால்
நான் திருக்குறளாக இருப்பேன் .......!
நீ தரையாக இருந்தால்
நான் நிழலாக இருப்பேன் .......!
நீ நானாக வேண்டும்
நான் நீயாக வேண்டும்
நாம் நாமாக வேண்டும்
நம் காதலில் இத்தனை ஒற்றுமை வேண்டும்
என்பதற்காகவே நான் பழகிய அர்த்தங்கள்
இந்த கவிதை....!!! 

Saturday, 10 December 2011

உன் விரல் பிடித்து...


உன் விரல் பிடித்து
சாலையை கடக்கும் போதெல்லாம்
அம்மா கை பிடித்து நடக்கும்
குழந்தையாகிப் போகிறேன்... 

காத்திருக்கிறேன்.

உனக்கு கடிதம் 
எழுதிவிட்டு 
காத்திருக்கிறேன். 
பார்ப்பவனெல்லாம் 
தபால் காரனாகவேத் 
தெரிகிறான்.

ஒரு தனி சுகம்........

அன்போடு நட்பு சேர்ந்தால் சுகம், 
மோகத்தோடு காமம் சேர்ந்தால் சுகம், 
உடலோடு உடல் சேர்ந்தால் சுகம், 
கடலோடு நதி சேர்ந்தால் சுகம், 
காற்றோடு மரம் சேர்ந்தால் சுகம், 
மலரோடு வண்டு சேர்ந்தால் சுகம், 
அலையோடு கரை சேர்ந்தால் சுகம், 
டைரியோடு கவிதை சேர்ந்தால் சுகம், 
எழுத்தோடு வார்த்தை சேர்ந்தால் சுகம் , 
என்னோடு அவள் இறந்தாலும்,வாழ்ந்தாலும் எனது காதலுக்கு ஒரு தனி சுகம்........

உன் கைவண்ணம் என்று....

காகிதப் பூவிலும் 
வாசமுண்டு 
உணர்ந்தேன் 
வண்ணத்துப் பூச்சியின் 
வர்ணங்கள் இருந்ததனால் 
பின் புரிந்தேன் அவை உன் 
கைவண்ணம் என்று...........................!! 

காத்திருக்கின்றேன்.....

விண்வெளியில் தாவின என் கால்கள் 
நம் காதலை புரிந்தபோது...... 

நிலவு கூட புதிதாய் போனது 
உன் பதில் எனை சேர்ந்ததாலே....... 

சுட்டிடும் சூரியன் தட்பம் தந்தான் 
நீ எனை சேர்ந்ததாலோ........? 

கண்ணோரம் பட்டாம் பூச்சி 
காதோரக் காற்றும் உன் 
தீண்டலாய்................... 

கண்ணோக்கும் இடமெல்லாம் உன் விம்பங்கள் 
மாத்திரமே என் நிஜமாக..................... 

நிழலுடன் வாழ்கிறேன் உன்னுடன் 
வாழ்ந்திடும் நாட்களை எண்ணியவளாய்..... 
காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கவில்லை 
காதல் வருகை எண்ணிக் காத்திருக்கின்றேன் 
இன்பம் சுமந்தவண்ணம்.......... 

காதலின் அருமை.....

நீங்கள் 
என்னை போலவே 
எப்போதும் 
எதையாவது 
கிறுக்கிக் கொண்டே இருந்ததுண்டா? 

பன்னிரெண்டு மணிக்கு மேலேயும் 
தூக்கம் வராமல் 
எப்போதாவது 
தைலம் தடவிக்கொண்டு 
தவித்ததுண்டா? 

அண்ணாசாலையில் 
அக்கம் பக்கத்தரையும் கவனிக்காமல் 
எதையாவது 
தனியாக 
புலம்பிக்கொண்டே போனதுண்டா? 

இடதுகால் செருப்பை 
வலதுகாலில் மாட்டிக்கொண்டு 
முழுசாக ஒரு பயணத்தை 
முடித்து கொண்டு வந்ததுண்டா? 

இருபது சிகரெட்டுகளை 
இரண்டே மணி நேரத்தில் 
ஊதி தள்ளியதுண்டா? 

"என்ன ஆச்சோ இவனுக்கு" 
என்ற அம்மாவின் ஏச்சுக்கு 
எப்போதாவது 
ஆளானதுண்டா? 

இதில் 
எதுவுமே இல்லையென்றால் 
உங்களுக்கு 
எங்கே புரியபோகிறது 
காதலின் அருமை. 

என்னை சிறைபடுத்தியவளே!


ஒரு சுதந்திர தின விழாவில்
என்னை சிறைபடுத்தியவளே!
என்னை
ஒரு துண்டுகளாக
உடைத்து போட்டவளே!

நிறைய லட்சியங்களோடு
நீயும்
நீ மட்டுமே லட்சியமாக
நானும் . . .
அன்று
உனது பாதங்களைதான்
சுமேரு மலையென்று நினைத்து
ஒரு சொர்கத்தை
தேடி கொண்டிருந்தேன்.

உன்னை
ஒரு திசைகாட்டியாக
எதிர்பார்த்தபோது
நீயே
எனது திசையாக
மாறிப்போனதை . . .

என் லட்சியத்தை அடைய
உன்னை
ஒரு வழித்துணையாய் எதிர்பார்த்தபோது
நீயே எனது லட்சியமாகிவிட்ட . . .

என் வாழ்க்கை படகிலே
நீ
துடுப்பாகி இருப்பாயென்று
நினைத்தபோது
துளையாக அல்லவா மாறிப்போனாய்.

எது எப்படியோ
இன்று
நீ
உனது பாதையில்
நான்
எனது பாதையில்
நிறைய கிழிசல்களோடு. 

உன் புன்னகை வேண்டும் ....


நினைவில் நிலையாய் நிறைந்தாள்
உதட்டில் பெயரால் இனித்தாள்
வானுக்கு நிலவு வேண்டும்
பயிருக்கு நீர் வேண்டும்
என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

என் கண்களை உற்றுப் பார்
உன் விம்பம் தெரியும்
என் உடலைத் தொட்டுப் பார்
உன்னை நீ உணர்வாய்
என் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்
உன் பெயரை அது சொல்லும்


வன் நிறைய நட்சத்திரங்களுண்டு
விடி வெள்ளி போல் வருமா
உலகெல்லாம் பெண்கள் உண்டு
உன் போல் வருமா

இரு விழிகளை
ஒரு முறை பார்தது
இருபத்தி நான்கு
மணி நேரம்
நினைவில் நிறைந்தது

காதலிக்க முடியவில்லை


காதலிக்க தெரிந்தபோது 
காத்திருக்க தெரியவில்லை 
காத்திருக்க தெரிந்தபோது 
காதலிக்க முடியவில்லை 

உனக்கு பதிலாய்...


என் கன்னத்தில்,
தவறாமல்
முத்தமிட்டுச் செல்கின்றது...

உன் நினைவாக
நீ எனக்கு
தந்துவிட்டுச் சென்ற
"கண்ணீர்"

உனக்கு பதிலாய்...

வாழ்க்கை முழுவதும் விரக்தி!



வெள்ளைத் தாளில் பிள்ளையார் சுழி
தேர்வில் கிடைத்தது வெற்றி !

என் வெள்ளை மனதில் உன் ஞாபகம்
வாழ்க்கை முழுவதும் விரக்தி! 

உன் கை ரேகை !


நீ கிழித்தெறிந்த கவிதைகளின் காகிதங்களை ஓட்ட வைத்து பார்த்தபோது அழியாமல் உள்ளது! அழகான உன் கை ரேகை ! 

தீராத அவள் நினைவு !


இனிப்பு குவியலை எறும்புகள் திண்பது போல், திகட்டாமல் என்னையும் தின்கிறது ! தீராத அவள் நினைவு !

முடிவு சொல்.....

காற்றை சுவாசிக்கிறேன். 
உன்னை நேசிக்கிறேன். 
வாழ்வதற்காக சுவாசிக்கிறேன். 
உன்னை நேசிப்பதற்காகவே வாழ்கிறேன். 

சில நேரங்களில்ல 
காற்றை நேசிப்பதைபோல 
உன்னையும் சுவாசித்துவிடுகிறேன். 

போராட்டம் மட்டுமல்ல 
காதலும்கூட 
உணர்வின் வெளிப்பாடுதான். 
அது இல்லையென்றால் 
மார்க்சோடு சென்னியேது? 
மார்க்சியமும் மண்ணிலேது? 

வார்த்தையில்லாமல் கவிதை இல்லை. 
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 

எனது பேனா 
கவிதைக்கு 
புது இலக்கணம் 
வகுத்துக் கொண்டிருந்தது. 

நானோ 
நமது காதலுக்கு 
புது இலக்கணம் 
வகுத்து கொண்டிருந்தேன். 

உரசினால் 
எங்கே நீ 
எரிந்து போவாயோயென்பதால் 
உன்னை 
பூஜிக்க மட்டுமே செய்கிறேன். 

நான் 
உன்மீது 
கொண்டுள்ள அன்பிற்கு 
களங்கப்பட்டுவிட்ட 
காதல் என்னும் வார்த்தையை 
பிரயோக படுத்த முடியாது. 

இலட்சிய பயணத்தில் 
வழித்துணையாய் 
வந்த உன்னை 
வாழ்க்கை துணையாய் 
அழைக்கும் துணிவு 
என்னிடமில்லை. 

கொள்கை பாதையில் மட்டும் 
குறுக்கீடு இல்லையென்றால் 
நீயே எனது.... 

என் காதல் 
ஒரு தலை ராகமல்ல. 
ஒருவகை ராகம். 
ஒட்டாமலே 
உதடுகள் இசைக்கும் 
சங்கீதம். 

ஆம் 
என் காதலை 
எப்போதும் நான் 
உன்னிடம் கூட 
சொல்ல துணிந்ததில்லை. 
ஆனால் 
அந்த சொல்லாத காதலிலும் 
சுமமொன்று 
இருக்கத்தான் செய்கிறது. 

உன்னில் 
விதைபோடாமலே 
என்னில் ஆசைகள் 
விருட்சமானது. 

உன் நினைவுகளை 
என்னில் போட்டு 
புதைத்தேன். 
பிறகுதான் தெரிந்தது 
விதைத்தேன் என்று. 

கற்பனை கூடாரத்தில் 
உன்னோடு 
கனவு வாழ்க்கை 
வாழ்ந்து வருகிறேன். 

உனக்கே தெரியாமல் 
நமது குடும்பம் 
நடந்து கொண்டுதானடி இருக்கிறது. 

என் மனசுக்குள்ளேயே 
நான் மௌனமாய் 
மானசீகமாய் 
அரங்கேற்றிய நாடகத்தில் 
நான் தலைவன் 
நீ தலைவி. 

உன்னோடு கைசேர விரும்புவது 
ஏதோ 
கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு 
கண்ணம் கிள்ளுவதற்காக அல்ல. 

ஒற்றைகாலன் 
ஒண்டி கட்டையாய் 
ஊர்போய் சேரமுடியாது 
என்பதால் 
உன்னையும் துணைக்கழைக்கிறேன். 

புரட்சி வானத்தில் மட்டுமே 
பறந்து பழகிய 
எனது கவிதை பறவை 
பூவானத்தில் சிறகடிக்க 
உனது சிறகுகளை 
கடன் கேட்கிறேன். 

உன் புன்னகை பூத்த முகத்தைதான் 
புத்தகமென்றே நினைக்கிறேன். 

கண்ணே! 
உன் கபடமற்ற 
அர்த்தமற்ற சிரிப்புக்கு 
ஆயிரமாயிரம் அர்த்தங்களை கற்பித்து கொண்டிருக்கிறேன். 
அந்த புரியாத சிரிப்புக்கு 
புதிதான அர்த்தம் தேடி 
மெல்ல மெல்ல 
தோற்றுபோய் கொண்டிருக்கிறேன். 

"நீ ரொம்பத்தான் 
மாறிவிட்டாய்" - என்கிறாய் 
என்னவளே! 
இந்த மாற்றத்திற்கே 
காரணமானவள் 
நீயல்லவா? 

கொள்கையை 
பாதுகாப்பதிலும் சரி 
இலட்சியத்தை 
நிறைவேற்றுவதிலும் சரி 
இன்னும்கூட 
நான் 
இரும்பு சங்கிலிதான். 
ஆனால் 
நான் 
இரும்புசங்கிலியென்பதுதான் 
என்னுடைய 
இப்பொழுதைய பலவீனமே. 
ஏனென்றால் 
உன் பார்வை காந்தமாயிற்றே. 

உலகின் 
ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் 
நீ 
ஒரே பார்வையில் 
பிரதிபலிப்பாயே! 
அந்த பார்வை வழங்கிய 
ஜென்ம சாபல்யத்தை 
பத்திரமாய் 
மிக பத்திரமாய் .... 

உன் ஒற்றை பார்வையில் 
ஓராயிரம் சொர்கங்களை 
தரிசித்துவிட்டு போகிறேன். 

எனது சுவாசத்தின் 
ஆதாரம் 
மற்றும் 
அர்த்தமாய் 
இருப்பவள் 
நீ. 


மண்பானைக்குள்ளே 
தேனை வைத்திருப்பதுபோல 
என்னுள் 
உன்னைபற்றிய 
இனிய கவிதைகள் மட்டுமதான் 
இருக்கிறது. 

என்னவளே! 
உன்னைவந்து அடைவதற்கே 
உருவாக்கப்பட்ட 
எனது பல கவிதைகளுக்கு 
சிறகுகள்கூட 
இன்னும் முளைக்கவில்லை 
ஆனால் 
எனது கனவுகளில் மட்டும் 
காலமரம் 
இப்போதே 
பூ பூக்க தொடங்கிவிட்டது. 

அந்த கனவூகள் யாவும் 
உனது கடையில்தான் 
வாங்கப்பட்டது. 

எங்கே உனக்கு 
நினைவிருக்கிறதா? 
ஒரு நாள் 
"உனக்கு 
கவிதை எழுத தெரிமா? 
என்று கேட்டாய் நீ. 
அப்போது 
இப்படித்தான் 
என் மனசுக்குள்ளேயே 
சொல்லி கொண்டேன் 
"ஏ கவிதையே! 
உன்னை படிக்க தெரியுமடி" 
என்று. 

ஜனகன மனஅதியைபோல் 
உன் பெயரால் 
ஒரு காதல் கீதம் இயற்றி 
உன் பிரமிப்புகளை 
என் கையில் 
வாங்கிக்கொள்ள ஆசை. 
ஆனால் 
ஏனோ தெரியவில்லை 
ஏழு ஸ்வரங்களுக்குள் 
நீ 
அடங்காமல் போய்விடுகிறாய்.... 

என் கவிதையினை 
யார் வேண்டுமேயானாலும் 
இதழ்களில் சூடலாம். 
ஆனால் 
நீ மட்டுமே 
இதயத்தில் சூடமுடியும். 

என் கவிதை 
உன் இதழ்களில்ஏறி 
உட்கார்ந்து கொண்டால் போதும். 
அது 
அச்சில் ஏறி 
அமர்ந்துவிட்டதாய் 
ஆனந்தமடைவேன். 
அதன்பின் 
அது 
காற்றிலே தொலைந்துபோனாலும் 
சிரஞ்சீவியே. 

என் கவிதை தோட்டத்தில் 
எத்தனையோ காவிய மலர்கள். 
நீ சூட மறுத்து விட்டால் 
அவை வெறும் 
காகித மலர்கள். 

உன் இதயகோயிலில் தொடுத்த 
மலர்களின்உன் இதயகோயிலில் தொடுத்த 
மலர்களின் எச்சங்களைதான்
இறைவனுக்கு
சமர்பிக்கிறேன்.

இந்த பாட்டு பறவை
பறக்க பழகி கொண்டதே
உனது ஆகாயத்தில்தானே
கள்ளத்தனமாய்.

தெரியுமா உனக்கு?
உனது
இதழ்கள் திறக்கப்படும்போதுதான்
எனது
எழுதுகோலும் திறக்கப்படுகிறது.

உனது
ஒவ்வொரு சிரிப்பும்
என் கவிதை குழந்தையின்
கருவறை.
என் கவலை சவங்களின்
கல்லறை.

யோசிக்கிறேன்.
உன்னிடம்
அந்த கவிதைகளை விற்றுவிட்டு
உன் காதலை
வாங்கி கொள்ள முடியுமா என்று.

உனக்கு
பரிசளிப்பதற்காக
ஒரு கையில்
விலைமதிப்பற்ற கவிதைகளையும்
உன்
இதயத்தை யாசிப்பதற்காக
இன்னொரு கையில்
பிச்சை பாத்திரத்தையும்
ஏந்தி நிற்கிறேன்.

யோசித்து பார்க்கிறேன்.
யோசித்து பார்ப்பதற்கு
உலகில்
உன்னைதவிர
வேறென்ன இருக்கிறதென்று.

உன் பெயரல்லாத கவிதையினை
எனது பேனா
எழுதுகிறபோது
ஏதோ
காகிதத்தை
களங்கபடுத்திவிட்டதாய்
உணர்கிறேன்.

நீயல்லாத பாடலினை
எனது உதடுகள்
உதிர்த்துவிட்டால்
காற்றை
களங்கப்படுத்திவிட்டதாய்
நினைக்கிறேன். 
ஏதோ
நான் பார்க்கும்
வெள்ளையேடுகள் எல்லாம்
உன் பெயா;
பதிக்கபடுவதற்காகவே
படைக்கப்பட்டதாய்
தோன்றுகிறதெனக்கு.

எதிலிருந்து
எழுத தொடங்கினாலும்
மீண்டும் மீண்டும்
காதல் என்கிற புள்ளியிலேயே
வந்து முடிந்து போகிறது.
என் கவிதைகளனைத்தும்.

உன் உதடுகளிலிருந்து
உதிர்க்கபட்டால்
கழுதையென்பதும் கவிதைதான்.

இதோ
இந்த சிரிப்பில்தான்
நான்
எனது இலட்சிய விலாசத்தை
தொலைத்துவிட்டேன்.

எனது இரவுகளும் சரி
பகலும் சரி
உன் நினைவுகளுக்குதான்
இரையாக்கப்படுகின்றன.

எனது நிழலைகூட
இருட்டில் போகும்போது
தொலைத்துவிட்டுத்தான்
போகிறேன்.
உனது நினைவுகளையோ
நீராட போகும்போதுகூட
எடுத்து கொண்டல்லவா செல்கிறேன்.

உன் நினைவுகள்
என் அருகில் படுத்துகொண்டு
ஆரிராவும் பாடுகின்றன.
உறங்கிய பின்னே
ஓங்கியும் அடிக்கின்றன.

உன்னை காணும்போதெல்லாம்
கண்களில்
வண்ணம் பூசிக்கொண்டதாய்
ஒரு புரியாத பூரிப்பு.
ஆனால்
அதே நேரத்தில்
இதயத்தில்
ஏதோ
இனம் தெரியாத சுமை
ஏறிக்கொள்கிறது.

உன்னை பிரிந்து கழிக்கின்றபோது
ஏதோ
இந்த பூமி
என்னை விட்டுவிட்டு
தான் மட்டும்
தனியாய் சுழல்வதாய்
உணர்கிறேன். 
கொதிக்கும் பகலிலும்
குளிர் காய்கிறேன்
உன் வரவால்.
பனி இரவிலும்
பற்றி கொண்டு எரிகிறேன்
உன் பிரிவால்.

உன்னை
காதலிக்க தொடங்கியபின்
நான்
எனது இமைகளைகூட
தொலைத்துவிட்டேன்.

உன்னோடு கழிக்கின்றபோது
ஆண்டுகள்கூட
அணுப்பொழுதாகிவிடும்
அதிசயம்
இன்னும் விளங்கவில்லை.

நீ
என்னோடு
இருந்த நேரங்களிலும்
பிரிந்து செல்லபோகும்
நேரத்தை நினைத்து
வருந்தி கொண்டுதான் இருந்தேன்.

தெரியுமா உனக்கு?
உன்னை காணாதபோதெல்லாம்
நான்
கல்லறைக்கு
போய்விட்டேனென்று.

நீ
மாட்டேனென்று
மறுத்தபோது
இன்றோடு
இந்த உலகம்
முடிந்துவிட்டதாகத்தானடி
தோன்றியதெனக்கு.

உன்னை பார்க்காவிடில்
பகலும்கூட
அமாவாசைதானடி எனக்கு.

என்னவளே!
எங்கெல்லாம்
ஒளிந்திருக்கிறாய் நீ தெரியுமா?

இடைவெளியெதையும்
மாற்றுமென்பதால்
இரண்டாயிரம் மைல்களுக்கு
அப்பால் நான்.

ஆனால்
செம்பல் நதியின் சினுங்கலும்
சிட்டுக்குருவியின் கீச்சலும்
உன்னைத்தானடி
நினைவுபடுத்துகிறது.

அழகானயெதுவும்
உன்னை
எளிதாக நினைவுபடுத்திவிட்டு
போகிறது.

அழுகுயென
நான்
ஆராதித்துகொண்டிருப்பது
உன் பௌதீக வடிவத்தையல்ல.

உன்னோடு நடத்தும்
பார்வை பரிமாற்றத்தின்போது
என்னுள்
ஏதோ
ரசாயண பரிமாற்றமும்
நடந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

உன்னை நினைவூபடுத்திகொள்ள
என்
இதய துடிப்பைதவிர
வேறு எதுவுமே இல்லையடி
என்னிடம்
இப்போது.

ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பதைப் போல
துடிதுடிக்கும்
உன் இமைகளையே
இமைகொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உன் கபடமற்ற சிரிப்பு
இன்னும் எனக்கு
அப்படியே
நினைவிருக்கிறதடி.
எனது ஒவ்வொரு பார்வையாலும்
உன்னை
புகைப்படம் பிடித்திருக்கிறேன்.
நீயில்லையென்றாலும்
அந்த நினைவுகளையே
என்னோடு வாழ
துணைக்கழைத்து கொள்வேன்.

என் நெஞ்சவானத்தில்
நினைவு மேகமாய்
நீ
ஒவ்வொரு பொழுதும்
உலா வருவாய்
எனது
அந்த நினைவு நிலாவுக்கு மட்டும்
தேய்பிறை
என்றென்றும் இல்லையடி.

என்னவளே!
என்னை மறந்துவிடு
என்று சொன்னவளே!
தேதி காகிதங்களை
கிழிப்பதை போல
அந்தந்த தின நினைவுகளையும்
கிழித்தெறிய முடிந்திருந்தால்
நீ கேட்பது சாத்தியம்தான்.

விடியலின் அடையாளம்
வெண்மணியின்
விலகலில்தான் அடங்கியிருக்கிறது.
எனது விடியல் மட்டும்
உனது வருகையில்தான்
அடங்கியிருக்கிறது.

உன் காலடி ஓசையில்தான்
என் இதயதுடிப்பை
கேட்கிறேன்.

கண்ணே!
சிறியதாய்
உன்னுள்
ஒரு உலகம்
அடங்கியிருப்பதாய்
உணர்கிறேன்.

எனது பார்வைக்கு
நீ மட்டும்தான்
இந்த பிரபஞ்சம் முழுதும்
நிரம்பி வழிவதைபோல
தோன்றுகிறது.

எனக்கென்று வாய்த்த
சின்னதொரு உலகமடி
நீ.

நிலாவின் ஒளியெல்லாம்
உன்மீது மட்டுமே
வீசுவதாய்
தோன்றுகிறதெனக்கு

நீ
நடந்து வந்த
சுவடுகளில் நடப்பதையே
பேரானந்தமாய் உணர்கிறேன்.

நான் கொண்ட பெருமையே
நீ தானே கண்ணே!

என் வாழ்வின்
வறண்ட பூமியில்
நீ மட்டும்
நீர்ச்சுனையாய்
கிளம்பவில்லையென்றால்
எப்போதோ
நீர்த்து போயிருப்பேனடி.

மேகம் வந்து
மெதுவாய்
தொட்டுச் செல்வதுபோல்
உனது தாவணி
என் கண்ணத்தில் பட்டுச்செல்லும்
இந்த பருவமழை
அனுபவத்தில் நனைவதற்கே.

நான் இத்தனை தூரங்களை
கடந்துவந்தேன் போலும்.
இத்தனை வருடங்களை
தாண்டிவந்தேன் போலும்.
இந்த உலகத்தில்
எனது பங்கு
நீ மட்டுமே.

வாழ்ந்தால் உன்னோடு
இல்லையெனில் மண்ணோடு
இவை வெறும்
கவிதை கோடுகளல்ல
காரண கோடுகள்.
ஆனால்
நிரப்பி தர வேண்டியவள் மட்டும்
நீதான் கண்ணே!

எனது சிந்தனையை
சில்லறை மாற்றிவைத்து கொண்டு
உனக்காகவே
மெல்ல மெல்ல
செலவழித்து வருவேன்.

கண்ணே!
உனது இசைவுக்காய்தான்
இந்த எழுத்துக்களின்
எழுச்சி பேரணியை
நடத்திக் கொண்டு வருகிறேன்.

இல்லையெனமட்டும்
சொல்லிவிடாதே
ஏனெனில்
இப்போதே
நான்
ஏறத்தாழ இறந்துவிட்டேன்.

எந்த மலரையும்
பார்த்துக் கூட செல்லாதவன்
பறித்துக் கொள்ள ஆசைபட்டது
இந்த மலரைத்தான்.

ஏ சம்யுக்தா!
நான்
குதிரையில்லாத
பிருத்துவிராஜன்தான்
ஆனால்
வாழ்க்கை பயணத்தில்
உன்னில்
சுமையேறமாட்டேன்.

நீ
சொல்ல போகும்
இம்மென்கிற சம்மதத்தைதான்
ஒரு பூபாளமென்று
நினைத்துக் கொண்டு
ஒரு விடியலுக்காய்
காத்திருப்பேன்.

முடிவு சொல்.
எனக்கு முடிவு கட்டிவிடாதே.