கருமாறி பிறந்தவர்கள்
கவலையிது
*
வருடத்திற்கோர் தாலி
எம் கழுத்தில்
ஒருவனே சொந்தம் எமக்கு
இன்நாளில் !!!!!!
இருந்தும் இராத்திரிகளுக்கு
சொந்தமில்லை நம்முடல்!!!!
ஏனோ தாலிகள் மட்டும்
தவறுவதில்லை
வருடத்தில் ஓர்முறை....
காய்கின்ற இழைகள்
கணநேரம் இருக்கவில்லை
எம் கழுத்தில்!!!!!
கட்டியவன் கைகளே
வெட்டிவிடுகின்றன
அவைகளை.....
இருந்தும் விதவைகள்
ஆகவில்லை நாம்...
எமக்கோர் அற்புதவாழ்வு
இருந்தும் அவசரத்திற்க்கு
ஒதுங்க அவனியில்
இடமுமில்லை
அரசாங்கம் ஒதுக்கவுமில்லை...
எம்முடல்கள் சிவன்பாதி
உமைபாதி......
பிரம்மன் ஏனோ
பித்தனாகிவிட்டானோ!!!!!!!
பிதா செய்ததவறால்
பிழையாய் பிறந்தோமோ!!!!
விடைகாணா விசித்திரம்
நாங்கள்.....
நாமென்ன பிழைசெய்தோம்!!!
நமக்கு
நாவிருந்தும் பயனில்லை...
கூத்தாண்டவா கூத்துக்கள்
வேண்டாமென்று கூறு
சிவவிஷ்ணுவிற்க்கு...
தாலிகள் நிலைக்கவேண்டாம்
எமக்கு
தரணியில் தன்மானம்
கிடைத்தால் போதும்...
தலைநிமிர்ந்து வாழ்வோம்
அர்ஜீனன் பரம்பரை
நாமென்று