Monday, 2 May 2011

தன்னை உணர்தல்…

காஞ்சிபுரத்துக் கோவில் கருவறைக்குள் காமபூஜை..
அடுத்தவர்களை கதவைத் திறக்கச் சொல்லி
கமுக்கமாய் தன் கதவை
அடைத்துக்கொண்டவனின் இச்சைக் கூத்து..
தியானநிலை பரவசம் என்ற பெயரில் ஆசிரமத்துக்குள்
போதையில் பாதை மாறிப் போன மனிதக் கூட்டம்..
என்ன நடக்கிறது இந்த சமூகத்தில்..
எங்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த மனிதம்..
சுத்த முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்
முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர்களை முழுதாய் நம்பி..
இருக்கின்ற ஒற்றை வாழ்க்கையை
அர்த்தத்தோடு அழகாய் 
வாழ்ந்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு
தேவையற்றதை தேடி
அசிங்கத்துக்குள் விழுந்து தொலைவது ஏன்..
முதலில்..
உண்மையான ஆன்மிகம் என்பது கடவுளைப் புரிதல்..
கடவுளைப் புரிதல் என்பதற்கு பொருள்
தன்னை உணர்தல்..

தன்னை உணர்ந்து.. தன் இலட்சியம் கொள்கைகள் நோக்கி
தெளிவாய் பயணிப்பவனைத் தேடி வருமய்யா கடவுள்..
தன்னை புரிந்து.. தன்னை நேசித்து.. தன்னை படித்து..
தன்னை தெளிவுபடுத்திக்கொள்ளும் எவனுக்கும்
வெற்றுத் தேடல் இருக்காது வேறு இடத்தில்..
குடும்பத்தோடும் சுற்றத்தோடும்
இன்பதுன்பம் பகிர்ந்து பிரியம் கொடுத்து வாங்கி
நிம்மதியாய் நிமிடங்களைக் கழிக்காமல்
நாளெல்லாம் நாயாய் ஓடிக்கொண்டிருந்தால்
ஒரு கட்டத்தில் எதுவும் பிடிக்காமல்போய்
இப்படித்தான் ஏதாவது
பைத்தியக்காரத்தனம் தோன்றும்..
என் சக மனமே..
இனியாவது திருந்து..
கடவுளைப் புரிந்து கொள்வதாய்ச் சொல்லி
கண்டவன் காலில் விழுவதைவிட 
உன்னைப் புரிந்துகொண்ட
உனக்கான வாழ்தலை
உயிர்ப்போடு வாழ்ந்துபார்
அதுதான்.. அந்த உன்னதமான
உண்மையான வாழ்க்கைதான் கடவுள்…
.
நானும் ஆன்மீகக்காரன்தான்.. அதற்காய் ஆர்வக்கோளாரில் அளவுமீறிச் செல்பவன் அல்ல… தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.. அதில் தவறே இல்லை… பொய்களெல்லாம் இப்படித்தான் ஒருநாள் கேவலமாய்  வெளிப்படும்..  உண்மையான ஆன்மீகம் என்றும் சத்தியத்தோடு நிலைக்கும்…
உண்மை வேண்டி…
பிரியமுடன்…
பிரியன்…

No comments: