உனக்கும் எனக்குமான
பழகுதல் நாட்களில்..
நமக்கே தெரியாமல் நமக்கிடையில் விழுந்து
நம்முடனே பயணிக்கும்
நுண்ணிய இடைவெளி..
மிக மிக அபாயகரமானது !
சட்டென்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு..
உள்ளார்ந்த உறவுகளுக்கு இடையில்
விரிசலை உண்டாக்குவதில்
அது கை தேர்ந்தது…
ஒரு இதயம் காயப்பட்டிருக்கும் நேரத்தில்..
அதற்கு மருந்திட மனமில்லை என்றாலும்..
மேலும் காயமாக்கிவிட்ட இன்னொரு இதயத்தின்
சூழ்நிலை செயல் வழி..
விரிசலை உண்டாக்குவது
அதற்கு எப்பொழுதும் ரொம்ப பிடிக்கும்…
இதை சரி செய்ய..
நமக்கிடையிலான ஆழப்புரிதல்கள் அன்றி
வேறு வழியே இல்லை…
என் முத்தங்களையும் கொஞ்சல்களையும்
எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால்..
என் கோபங்களையும் திட்டுக்களையும்
கடந்து செல்ல முடியாமல் போகையில் எல்லாம்..
எங்கிருந்தோ வந்து
நமக்கிடையில் அமர்ந்து விடுகிறது
இந்த இடைவெளி !
உன்னை கொஞ்ச உரிமை கொண்ட
என் உதடுகளுக்கு..
திட்டவும் உரிமை உண்டென நான்
நினைத்துக்கொண்டிருக்கும் வேளைகளிலும்..
யார் யாரோ என் மேல் திணித்த
கனத்த வலிகளின் சுமைகளுக்கான
ஆறுதலாய் நீ இருப்பாயென..
உரிமையோடு உன்மீது நான் கோபப்பட்டு
உன் ஆற்றுதல் கிடைக்குமென
நான் நினைக்கும் வேளைகளில்..
உன் மீது கோபப்பட்டதற்க்காய்
நீ வருந்த நேர்கையில் எல்லாம்..
கொஞ்ச இருக்கும் உரிமை
கோபப்பட இல்லையோ என
மனம் நினைக்கும் மறுநொடியில்..
மத்தியில் வந்து மௌனமாய்
அமர்ந்துவிடுகிறது அதே இடைவெளி..
இந்த நுண்ணிய இடைவெளி
எப்போதும் தனது வலிமையை காட்ட
கிடைக்கும் வாய்ப்புகளுக்காக
காத்துக்கொண்டிருக்கிறது….
நமது புரிதல்களின் ஆத்மார்த்த பிணைப்புகள் அன்றி
அவற்றை யார் என்ன செய்ய முடியும்…
எனவே என் இணையே..
மிக மிகக் கடினமானதுதான் என்றாலும்..
என்னை நீயும் உன்னை நானும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
ஆழப் புரிந்துகொள்வோம்..
இந்த நுண்ணிய இடைவெளியின்
எதிர்பாரா தாக்குதல்களில் இருந்து
எப்படியாவது தப்பிக்க…
இல்லையென்றால்..
நம் காதலை நம்மால் கூட
காப்பாற்ற முடியாமல் போகக் கூடும்……
No comments:
Post a Comment