ஆகஸ்ட் 15..
காத்திருக்கிறேன் அவளின் வருகைக்காக..!!
அவள் வரச்சொன்ன அதே ஓட்டலில்,
அதே மூன்றாம் வரிசை முதல் மேசையில்..!
ஏதோ ஒரு படபடப்பு.. எனக்குள்..!!
என்ன சொல்ல..
அவளின் குரலை மட்டுமே அறிந்த நான்,
முதன்முதலாய் மலர் முகம் காண காத்திருக்கிறேன்.!
கணிப்பொறி உரையாடலும்,
அலைப்பேசி அரட்டையுமே
வளர்த்து வந்த என் காதலை
அவளிடம் உடைக்க போகிறேன்..
ஏற்றுக்கொள்வாளோ என்னை...!!
எவ்வளவு இனிமையானவள்
கட்டுப்பாடு மீறாமல் பழகும்
கந்தர்வ கன்னி...
அவளுக்கும் எனக்கும்தான் எத்தனை ஒற்றுமை..!
நிறத்தில் நீலம்,
எண்ணில் மூன்று,
கடவுளில் கணபதி,
சின்ன குயில் சித்ரா - என
எனக்கு பிடித்தவை பல
அவளுக்கும் பிடிக்குமே...!!
இவளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..
இத்தனைக்காலம்...!!
இப்போதும் தடுப்பது என் திருமணம் மட்டுமே..!!!
ஆம்.!?
நான் திருமணமானவன்...
ஆயினும் என்ன..?
எதற்காகவும் இவளை இழக்கப்போவதில்லை...
காதலை உடைத்து கைப்பிடிக்க போகிறேன்..
நான் மறைக்கபோவதில்லை...
என் திருமணத்தை..!
எனக்கு நடந்தது
என் விருப்பமின்றி...! - அன்று
எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்
காதலித்துதான் கல்யாணம் என்று...
வீட்டில் மறுப்பு,
தங்கையின் சமாதானம்,
தந்தையின் மரணம் - என
என்னை சம்மதிக்க வைத்தது..!
பொம்மை கல்யாணம் அதில்
எனக்கு நம்பிக்கையில்லை..
என் மனைவியிடம் நான் இதுவரை
பேசியது கூட இல்லை,
என்ன தெரியும் அவளுக்கு என்னைப்பற்றி..
என்னவோ அவளிடம் ஒத்துப்போகவில்லை..!
அனைத்திலும் சிறந்த இவள் எங்கே..? - என்
அலைப்பேசி எண் கூட தெரியாத மனைவி எங்கே..?
இதோ அவள் வரும் நேரம்
வந்துவிட்டது..
வந்துவிடுவாள் என் கனவு தேவதை...
அதற்குள் என்னை சரிசெய்துக்கொள்ள
கை அலம்பும் இடம் சென்றேன்..
சரிசெய்து திரும்புகையில்
பேரதிர்ச்சி...!!
நீல நிற புடவையில்
மல்லிகை மணமணக்க
தங்க தேவதையாய் அங்கு அமர்ந்தது
நான் தாலி கட்டிய என் மனைவி..!!
அவள் பார்க்குமுன்னே நான் வெளியேறினேன்..
வீடு செல்ல விருப்பமின்றி கடற்கரை சென்றேன்..
மணலில் அமர்ந்து மனதோடு பேசினேன்..
என் மனைவி தான் எவ்வளவு சிறந்தவள்..!!
அவளை பெற்ற நான் பாக்கியசாலி..!!
என் பழைய எண்ணங்களை
கடலில் கரைத்து விட்டேன்
என் அலைப்பேசியையும் சேர்த்து..!!!
No comments:
Post a Comment