Sunday, 6 November 2011

கருணையில் உதிரும் தர்மங்கள் ...


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய் 
கட்டில் படுக்கையில் தந்தை 

அன்னம் உண்ணா தாய் 
பால் வற்றிய மார்பு 
பசியில் அழும் தம்பி 

அம்மா பிச்சை போடுங்கள் 
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி 
பசியில்  துவளும் சிறுவன் 

உயிர்போர்த்திய நான்கு  ஜீவன்கள் 
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு 

இது வறுமைக் காகிதத்தில் 
இறைவனின் கைவண்ணத்தில்  
எழுதப்பட்ட  துக்கக் கவிதை 

விழிகளால் வாசித்த மனிதர்கள் 
 அகம்   இளகி  விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை 

ஆலயம் கோவில் மசூதி 
காணாத தெய்வ சன்னதிகளில் 
நிரம்பி வழிகிறது காணிக்கைகள் 

சிறு கருணையை எதிர்நோக்கி 
வறுமைக் கோட்டின் கீழ் 
எத்தனை எத்தனை மனிதர்கள் 

உண்டியல் நிறைய காணிக்கைகள் 
உண்ண உணவின்றி பக்தகோடிகள் 
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள் 

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை 
கருணையில் உதிரும் தர்மங்கள் 
எளியவர்களின் உயிர் காக்குகிறது 

No comments: