Sunday, 6 November 2011

நாளை சமூகம்


ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது
அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்
வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்
ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்
நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்
குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்
புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்
வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்
ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்
இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்
குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்
உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது
நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ
பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு
காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

No comments: