அடடா.. இந்த
தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !
துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும்
மக்களும் !
காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல
பண்டிகைக்கும்தான் !
எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..
தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..
எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..
இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !
அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன்
புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம்
செய்து ருசித்து..
எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன
புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !
பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..
சேலை கட்டத் தெரியாமல்
கட்டி நிற்கும்
சுடிதார்
சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !
அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !
பின்.. இருக்கும் வெடிகள்
வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள்
பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய்
சேருவோம்..
மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..
வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !
அன்று முழுக்க
பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் !
Monday, 14 October 2013
Naam sirithaal deepawali...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம்
தங்களின் கவிதை கிடைக்கப் பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கஅறியத்தருகிறேன்
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!
Post a Comment