Wednesday, 28 December 2011

நிர்க்கதியான வாழ்க்கையில்!

அன்போடு இங்கு
ஆகுதி பண்ணி
அடுத்தவர் மலைத்திட
ஆனந்த வாழ்க்கையில்
ஐக்கியமாய் வாழ்ந்திட்ட
ஓர் தாய் பெற்றெடுத்த
ஓப்பற்ற செல்வங்கள் நாம்!

ஆயிரம் கதை சொல்லி
அற்புதமான கற்பனைகளுடன்
அளவான வருமானத்தில்
அதிஷ்ட லக்சுமிகளாய்
ஆயுளுக்கும் வாழ்ந்திட
ஆசைதனை வளர்த்திட்ட
அழகிய வம்சம் நாம்!

காலத்தின் கோலத்தால்
போர் என்ற கோரத்தால்
பேரிடிகள் பல ஏற்று
பேதலித்து நிலை குலைந்து
சொத்துகள் பல இழந்து
சோகங்கள்தனை சுமந்த
திக்கற்ற உள்ளங்கள் நாம்!

உள்நாட்டு மண்ணிலே
உடுத்த உடையேதுமின்றி
உணவிற்கும் வழியின்றி
உறவுகள் யாருமின்றி
உயிர்ச்சேதம் பல பார்த்து
ஊமையாய் அழுதிட்ட
நாட்களை எண்ணுகிறோம்!

கூட்டுக் குடும்பத்தின்
கூரையை பதம் பார்த்த
குண்டு மழையிலே
குருதியில் நனைந்த எம்
குடும்பத்தின் உறவுகளை
ஒரு கணப் பொழுதினிலே
இழந்திட்ட உறவுகள் நாம்!

பௌர்ணமி நேரத்தில்
பகிர்ந்துண்ட கூட்டாஞ்சோறு
இன்னும் எம் நினைவில்!
நிஜமாய் இருந்த எம்
நிகரற்ற உறவுகளை
நிரந்தரமாய் இழந்த எம்
நிர்க்கதியான வாழ்க்கையில்!

No comments: