Sunday 8 May 2011

விழித்துக்கொள் வீணையாளே…

ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்..
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..
இதெல்லாம் இருக்கட்டும்..

கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..
இதை நீ அறிவாயோ ?
ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..

வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய்
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !

மதிப்பெண்களின் பின்னால் 
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில்
நமக்கு எவ்வளவு பெருமை !


ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்
அப்படியே மனப்பாடம் செய்து செய்து
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !


யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான்
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !

படிப்பு முடிந்து சுயமாய் உலகை
அணுகும் பொழுதுதான்
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !

எவ்வளவு பெரிய வித்தியாசம்..
இதுவரை படித்த அத்தனையும்
வெறும் அடிப்படை..
இனி இருப்பதை சமாளிப்பதுதான்
இங்கு வெளிப்படை என
மனம் காட்டிக்கொடுக்கையில்..
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !

அதனால்.. இனியாவது நமது
வேட்டிக்கதைப் பேச்சுக்களை
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..
அவரவர் விருப்பத்திற்க்கேற்ப
அவர்கள் விரும்பும் திசையில்
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த
தொழில்நிலை செயல்முறை நிறைந்த
யதார்த்தம் தப்பாத
பயனுள்ள பாடத்திட்டங்களை
நம் வருங்காலத் தலைமுறைக்கு
அறிமுகம் செய்வோம் !
பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !

கடலைப் பொட்டலம்போல கல்வியையும்
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !

இவையெல்லாம் தேவியே
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..

நீயோ இன்னமும் உன்
புன்னைகை தவழும் முகம் மாறாமல்
வீணையை அணைத்துக்கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !

நன்றாய் கவனித்துப் பார்..
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..
ஆனால் அதன் தந்திகளை எல்லாம்
அறுத்து விற்று பல காலமாயிற்று !
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..

செல்வியே உன் உன்னதக் கல்வியை
விபச்சாரக் கலவிபோல எண்ணி
விரசமாய் வியாபாரம் பேசி
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

கலைமகள் நீ விலைமகளாகும் முன்
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..



இன்றைய  கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது..  கண்டனத்திற்க்குரியது..  பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்..  அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை  அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்..   இது தகுமா !

இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க..  அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது.   இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட  கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.

ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே..  இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !

No comments: