Friday, 29 April 2011

சுகப் பயணம்…

 
அருகருகில் அமர்ந்து..
சுற்றம் மறந்து..
 
ஆர்வமாய் தலை சாய்த்துக் கேட்கும்
உன் அகண்ட விழிகளும்..
 
அதன் ஈர்ப்பில் மயங்கி
இன்னும் இன்னும் வளர்ந்துகொண்டே வரும்
என் மெய் பொய் சம்பவக் கதைகளும்..
 
மெல்லிய காற்று வந்து
கலைத்துப் போட்டதில்
சிறகு முளைத்து
என் முகம் உரச வரும்
உன் முன் நெற்றி முடியும்..
 
அதை லாவகமாய்
நுனி விரல்களால்
நீ அடக்கும் அழகும்..
 
சின்னச் சின்ன இயல்பான உரசல்களும்..
சில்லென நீ சிரித்த பொழுது
நான் இயல்பிழந்த கணங்களும்..
 
காதோர கிசுகிசுப்புகளும்..
கண்ணோர குறுகுறுப்புகளும் ..
திகட்டாத தித்திப்புகளுமாய்..
 
இறங்க வேண்டிய இடம் மறந்து
இன்னும் இன்னும் நீள்கிறது
சுவாரஸ்யமான நம்
புறவழிப் பேருந்து பயணம்…

No comments: