Friday, 29 April 2011

வார்த்தைகளில் வாழ்பவன்…


கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்…



பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…



சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…



புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான்
அறிய முற்படுகையில்…



முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்…



உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்…



வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா…

நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…

No comments: